tamilnadu

img

இனி பெட்ரோல் பங்குகளில் கிரெடிட் கார்டுகளுக்கு சலுகைகள் இல்லை!

பெட்ரோல் பங்குகளில் கிரெடிட் கார்டு உபயோகிப்பவர்களுக்கு, வரும் அக்டோபர் 1 முதல் சலுகைகள் இல்லை என எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.

கடந்த 2016-ஆம் ஆண்டு, கருப்பு பணத்தை ஒழிப்பதற்காக, 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று மத்திய அறிவித்தது. இதனால் மக்களிடையே பணப்புழக்கம் என்பது கடுமையான பிரச்சனையாக இருந்தது. இதை அடுத்து, இந்திய ரிசர்வ் வங்கி புதிய 2,000 ரூபாய் மற்றும் 500 ரூபாய் நோட்டுகளை வெளியிட்டது. ஒரு புறம் பணம் இருந்தாலும் சில்லறை தட்டுப்பாடுகளே நிலவி வந்தன. மறுபுறம் புதிய நோட்டுகள் கிடைக்காமல் மக்கள் திண்டாடி வந்தனர்.

இந்த சூழலில், டிஜிட்டல் பரிவர்த்தனைகளுக்கான பல சலுகைகளை அரசு வெளியிட்டது. மேலும் கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு, இ-வாலட் என டிஜிட்டல் பேமென்ட் வசதிகளையே அரசு ஊக்குவித்தது. கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டுகளை பயன்படுத்தி பெட்ரோல் டீசல் போடுபவர்களுக்கு பல சலுகைகளை வழங்கப்பட்டன. மத்திய அரசு, இதனை மேலும் ஊக்குவிக்கும் விதமாக இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், பாரத் பெட்ரோலியம், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் உள்ளிட்ட எண்ணெய் நிறுவனங்களிடம் டிஜிட்டல் பேமென்ட்டுகளை பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு சலுகைகளை வழங்கும் படி கேட்டுக் கொண்டது. இந்நிலையில், எண்ணெய் நிறுவனங்கள், கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு மற்றும் இ-வாலட்கள் மூலம் எரிபொருளுக்கான பணம் செலுத்துபவர்களுக்கு 0.75 சதவிகிதம் தள்ளுபடியை வழங்கி வந்தன. 

தற்போது, வரும் அக்டோபர் 1 முதல் நடைமுறைக்கு இந்த சலுகைகள் வழங்கப்படாது என்று எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. எனினும் டெபிட் கார்டு மற்றும் இ-வாலட் மூலம் பணம் செலுத்துபவர்களுக்கு இந்த சலுகை தொடரும் என்றும் தெரிகிறது. மேலும் எஸ்.பி.ஐ வங்கியும் வரும் அக்டோபர் 1 முதல் கிரெடிட் கார்டுகளுக்கான சலுகைகளை ரத்து செய்யப்படுவதாக அதன் வாடிக்கையாளர்களுக்கு செய்திகள் அனுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.

;